கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி

363 0

கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கண்டிநமார்கா, மேதா மாகாண எல்லைகளுக்கு இடையே சிரஜாரா என்ற இடத்தில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலம், அந்த நாட்டின் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கிற நெடுஞ்சாலையின் ஒரு அங்கமாகும்.

இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளுக்கு இடையே அகப்பட்டு கொண்ட தொழிலாளர்கள் அலறினர்.

உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை நடத்தினர்.

இந்த விபத்தில் 9 கட்டுமான தொழிலாளர்களை பிணங்களாகத்தான் மீட்க முடிந்தது. 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போக்குவரத்து மந்திரி ஜெர்மன் கர்டோனா உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Leave a comment