சர்வதேசத்தை ஏமாற்றவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது ; சீ. யோகேஸ்வரன்

216 0

போராளிகளாக இருந்து தங்களுடன் இணைந்தவர்களை ஆட்சியாளர்களாக நியமித்துள்ளோம் என சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகத்தை நேற்று சனிக்கிழமை மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

“2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக தமிழன் ஒருவன் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பிள்ளையானுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களித்தார்கள். இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை.

போராளிகளாக இருந்து அரசாங்கத்துடன் இணைந்தவர்களை முதலமைச்சராக நியமித்துள்ளோம். வடகிழக்கினைப் பிரித்துவிட்டோம். பிரிந்த வடக்கு கிழக்கிலே கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து வந்த பிள்ளையானுக்கு கொடுத்துள்ளோம்.  இந்நிலையில், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பிள்ளையான் முதலமைச்சாக இருந்த காலத்தில் மாகாணசபையில் தன்னால் முடிந்தவரை உழைத்தார். வெளிநாடுகளிலிருந்து வந்த நிதிகள் சுருட்டப்பட்டன. கொரிய நாட்டுக்கு வேலைக்கு அனுப்ப வந்த நிதி, மட்டக்களப்பில் முதலமைச்சர்கள் மாநாடு நடாத்திய நிதி போன்றவை தொடர்பாக கணக்குகள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழன் என்றவகையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

பிள்ளையானின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் கிறீஸ் மனிதர் தோற்றம் பெற்றது. இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடியது ஆனால் பிள்ளையான் பார்த்துக்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரடியனாறு நிதிக் காப்பகத்திலிருந்த பணத்தை உரப்பையில் கொண்டுவந்தவர் பிள்ளையான்.

ரிதிதென்னவில் அமைக்கப்படும் இஸ்லாமிய பல்லைக்கழகம் அமைக்க  ஹிஸ்புல்லாவிற்கு பெரும் தொகை காணியை வழங்கியவர் பிள்ளையான். வாகரைப் பிரதேசத்திலுள்ள 51 ஆயிரத்து 800 ஏக்கர் தமிழ் மக்களின் காணியை இணைத்து ஓட்டமாவடியை நகரசபையாக மாற்றுவதற்கு இணங்கியவர் பிள்ளையான். இதனைத் தடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்திற்காக மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தோம். அதை வைத்துக்கொண்டு இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்க முடியாது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியுடடையவராக இருக்க வேண்டும்.

இந்த மண்ணிலே எமது இனம் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். பல சொத்துக்களை இழந்தோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை வட்டார வேட்பாளர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், ஜனநாயக போராளிகள் கட்சியில் மட்டு-அம்பாறை இணைப்பாளர் க.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment