18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: 22-ந்தேதிக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிப்பு

203 0

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதால் 22-ந்தேதிக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கில் இறுதி விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.

அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘செங்கோட்டையனை முதல்-அமைச்சர் ஆக்க தங்கள் தரப்பு விரும்பியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியைத்தான் ஏற்கனவே சுட்டிக்காட்டினேன். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் எங்கள் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று அறிவித்து அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று வாதாடினார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று நிறைவு பெற்றது. 22-ந்தேதிக்குள் அனைத்து தரப்பும் தங்களின் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பின்பு, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment