ஜெயலலிதா மரண விசாரணை கமிஷனில் தாக்கல் செய்தது என்ன?: அப்பல்லோ

208 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை கமிஷனில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், புகாருக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார்.

அவ்வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டு என சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, ஆவணங்களை ஜனவரி 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் கெடு விதித்தது.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று விசாரணை ஆணையத்தில் 2 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு செப். 22-ல் ஜெயலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது முதல் அதே ஆண்டு டிச. 5 வரை ஜெயலலிதா மரணம் அடைந்தது வரையிலான மருத்துவ ஆவணங்கள் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நகல் ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, மூல ஆவணங்களை ஆணையம் திருப்பி தந்துவிட்டதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Leave a comment