ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – தமிழக அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்

237 0

ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய மிருகநல வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய மிருகநல வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மிருகநல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமார், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

* அரசு அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.

* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கலெக்டர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

* ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் மற்றும் பதிவு செய்யப்பட்ட காளைகள் குறித்த தகவல்களை ஒரு மாதத்துக்கு முன்பே மாநில மிருகநல வாரியத்துக்கு கலெக்டர்கள் தெரிவிக்க வேண்டும்.

* பார்வையாளர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் காளைகள் வெளியேறும் பகுதியில் இரட்டை தடுப்பு அமைக்க வேண்டும்.

* காளைகளின் வீரியத்தை அதிகரிக்கும் வகையில் மருந்து எதுவும் செலுத்தப்படவில்லை என்று கால்நடை துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

* ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்கள் உடல்ரீதியாக தகுதியானவர்களா? என்பது குறித்து மருத்துவர்கள் சான்று அளிக்க வேண்டும். அதன் பிறகே அவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளூர் போலீசார் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இதனை மேற்பார்வையிட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

* காளைகள், போட்டியில் பங்கேற்பவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாளைக்கான இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மூன்று வயதுக்கு உட்பட்ட மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க வேண்டும் உள்பட 19 வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேசிய மற்றும் மாநில மிருகநல வாரியங்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் பட்டியலும் இந்த கடிதத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment