அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

381 0

டெங்குவை தடுப்பது உள்பட பல்வேறு அம்சங்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சுகாதாரத்துறை செயல்பாடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக தமிழக முதல்-அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தொடர்ந்து பெருமை பேசி வரும் நிலையில், டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் நோய் கண்டுபிடிக்கும் பணிகளில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியிருக்கிறது. இத்தகைய அவலத்திற்காக தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்.

2017-ம் ஆண்டில் டெங்குக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம்; அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், உண்மையில் 500-க்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள்; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை.

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமாக இருந்த போது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவன பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்தியக்குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் குறித்து ஆய்வு செய்தது.

அதனடிப்படையில் அக்குழுவினர் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள 23 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் டெங்கு காய்ச்சலை அரசு கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மத்தியக் குழுவினரின் இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மையாகும். கொசு ஒழிப்பு பணியில் தமிழக அரசு இன்னும் அலட்சியமாக செயல்பட்டதுடன், ஊழலிலும் ஈடுபட்டது என்பது தான் உண்மை ஆகும். வீடுகள் உள்ள தண்ணீரிலும், நீர் நிலைகளிலும் உள்ள கொசு முட்டை மற்றும் லார்வாக்களை அழிப்பதற்கு அபெட் எனப்படும் மருந்து கலக்கப்படும். இதன் விலை லிட்டர் ரூ.1200 ஆகும்.

ஆனால், அதற்கு பதிலாக ஒரு லிட்டர் ரூ.500 என்ற விலையில் கிடைக்கும் தரம் குறைந்த மருந்தை வாங்கி தமிழக அரசு பயன்படுத்தியது. இதில் நடந்த ஊழலை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்திய போதிலும் அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கொசு ஒழிப்பு பணிகள் பயனளிக்கவில்லை.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், எந்த ஒரு மருத்துவமனையிலும் நோயாளிகள் மேலாண்மை குறித்த தேசிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் மத்தியக் குழு குற்றம் சாட்டியிருக்கிறது.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் டெங்கு காய்ச்சலுக்கு இவ்வளவு பேர் இறந்தனர் என்பது மத்தியக் குழுவினர் அளித்த அறிக்கையில் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி மற்ற அம்சங்களிலும் தமிழக சுகாதாரத்துறை தோல்வி அடைந்துள்ளது. அதனால் தான் பிரசவத்தின் போது தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

மொத்தத்தில் குட்கா விற்பனைக்கு சட்டவிரோத அனுமதி அளிப்பதைத் தவிர சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வேறு எந்த பணியையும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. சுகாதாரத்துறை தோல்விகளுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். மேலும் சுகாதாரத் துறையின் கடந்த 6 ஆண்டு செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment