வக்கீல்களை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு

214 0

திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற 742 பேரை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ். வக்கீலான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

1991-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்தேன். ஏழ்மையின் காரணமான படிப்பை தொடர முடியவில்லை. அதனால் கூலி வேலைக்கு சென்றேன். பின்னர், திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பின் கீழ் கடந்த 2000-2002-ம் ஆண்டுகளில் எம்.ஏ. பட்டம் பெற்றேன்.

இதன்பின்னர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் நடத்திய நுழைவு தேர்வில் தேர்ச்சிப்பெற்று, பி.எல். சட்டப்படிப்பில் சேர்ந்தேன். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 2009-ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து, வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்தேன்.

நான் சட்டப்படிப்பில் சேரும்போது, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலும், இளநிலை பட்டம் பெறாமலும் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்கள், சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்கவும், பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யவும் தடை எதுவும் இல்லை.

நேரடியாக இளநிலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்பில் சேர தடைவிதிக்கும், சட்டக்கல்வி விதிகள் 2008-ம் ஆண்டு முதல் தான் அமலுக்கு வந்தன. ஆனால், இந்த சட்டவிதிகளை பயன்படுத்தி, நேரடியாக இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்த நான் உள்பட 742 வக்கீல்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளது.

பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது ஆகும். கடந்த நவம்பர் 9-ந்தேதி பார் கவுன்சிலை நிர்வகிக்கும் சிறப்புக்குழு இயற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், சிறப்புக் குழுவுக்கு இதுபோல தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை. இந்த சிறப்புக்குழு அன்றாட பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதுபோல நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். 742 பேரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.ஆர்.செல்வராஜ்குமார் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து இந்த மனுவுக்கு மத்திய சட்டத்துறை செயலாளர், தமிழக சட்டத்துறை செயலாளர், அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Leave a comment