தேசியச் செயற்பாட்டின் பற்றாளனுக்கு அகவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி

9944 0

தமிழீழ தேசத்தின், யாழ்ப்பாணம் இளவலையை பூர்வீகமாகவும், பின்னர் புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்து, தேசியச் செயற்பாடுகளில் அதி தீவிர பற்றாளனாகவும் பெரும்பணியாற்றி, இயற்கை எய்தியுள்ள நாட்டுப்பற்றாளர்: திரு. றிச்சாட் இமானுவேல் அவர்களின் பிரிவு என்பது நிகழ்காலச் செயற்பணிகளில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், எமக்கான ஒரு தாய்த்தேசம் சுதந்திர இருப்பை பெற்றுவிட வேண்டுமென்ற பேரவாவுடன் தம்மாலான பணிகளை செவ்வனே செய்துவரும் பல்லாயிரம் சமூகத் தொண்டர்களில் முன்னுதாரண நிலைபெற்று, தனது உடல் வலுவுக்கும், உள்மன விருப்புக்கும் அமைவாக, இதயசுத்தியோடு செயலாற்றியமைக்கான அடையாளத்தை வரலாறு பதிவு செய்துகொண்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிருவாக ஆளுகைக்கு உட்பட்டு, நகரச் செயற்பணிகளிலும், உப அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனிதநேயச் செயற்பாடுகளிலும், காலநேரங்களையும் கடினங்களையும் பொருட்படுத்தாது, இவர் ஆற்றிய பணிகளை எமது மனங்களில் இருந்து பிரித்துவிட முடியாது. இவரது பண்புமிக்க சமூக அணுகுமுறைகளை எமது மக்கள் எழிதில் மறந்துவிடவும் மாட்டார்கள். இவரது நடத்தைகள் சுயத்தை வென்றதான முற்போக்கு சுவடுகளாக ஏனைய செயற்பாட்டாளர்களை திடமாக முன்நகர்த்தும் என நம்பிக்கை கொள்கின்றோம்.

சுயவிருப்புகளும், தன்முனைப்புகளும் வலுப்பெற்று, அவற்றுக்கான சுதந்திர சூழமைவுகள் தாராளமாக இருக்கின்ற இந்த நாட்டிலும், அவற்றைக் கடந்து பொதுநல நோக்கில், சமூகவிருத்தியில் பற்றுக்கொண்டு, தேசியச் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, நிருவாக ஒழுங்கு முறைமைகளை கடைப்பிடித்து உழைத்து நின்றமைக்கான அடையாளமாக ‘நாட்டுப்பற்றாளர்’ எனும் உயரிய மதிப்பினை பெற்றுள்ளமையானது, எங்கள் மனங்களில் எப்போதும் உயிர்ப்புடன் கொலுவிருக்கும் தகமையினை காலம் மெருகூட்டி தந்துள்ளது.

இவரது செயற்பணிகளுக்கு மதிப்பளித்து, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும், அதன் உப அமைப்புக்களும் தலைசாய்த்து வணக்கம் செலுத்துவதோடு, இவரது நினைவுகளை சுமந்து தேசநலனுக்கான எமது பணிகளை முன்னெடுப்போமென உறுதிகொள்கின்றோம். இவரது பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-நன்றி-

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

Leave a comment