பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்!

400 0

Ban-Ki-moon-kCu-621x414@LiveMintஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் – அதாவது மே 23, 2009இல் – அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார்.

பான் கீ மூன், இலங்கை வந்த முதலாவது சந்தர்ப்பத்தில் நாடு, இரு விதமான பிரதிபலிப்புக்களைக் கொண்டிருந்தது. தெற்கும் அது சார் தளங்களும், பெரும் போர் வெற்றி மனநிலையில் திளைத்துக் கொண்டிருந்தன. அப்போது, அனைத்து விடயங்களும் போர் வெற்றி வாதம் என்கிற ஏக நிலையிலிருந்தே தெற்கினால் அணுகப்பட்டன. வடக்கிலோ, ஒட்டுமொத்தமாக இழப்பின் குரல், ஈனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. திக்கற்றவனுக்கு தெய்வமே துணையெனும் கருத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் மக்கள், தெய்வமும் சேர்ந்து பலியெடுத்ததன் பின்னரான அவலத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்தது என்ன என்பது தொடர்பில் சூனியமான சூழலொன்று நிலவியது.

பான் கீ மூனின் அப்போதையை வருகையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்களோ, அவர்களின் தரப்புகளோ சிந்திப்பதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. அல்லது, மனரீதியான தயார் நிலையில் இல்லை. ஆனால், தெற்கோ வெற்றி வாதத்தோடும், அதுசார் தெனாவெட்டோடும் பான் கீ மூனைக் கையாண்டது. முக்கியஸ்தர்களை வழக்கமாகக் கொழும்பில் சந்திக்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பான் கீ மூனை, கண்டியிலுள்ள தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்துக்கு அழைத்துச் சந்தித்தார்.

இறுதி மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்கிற பான் கீ மூனின் கோரிக்கைகளையும், மஹிந்த ராஜபக்ஷ மிக இயல்பாகப் புறந்தள்ளினார். இருவருக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்ட போதும், அதன்பின்னரான காலப்பகுதியில், ஐக்கிய நாடுகளோடு இணங்கிய விடயங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவோ, அவர் தலைமையேற்றிருந்த அரசாங்கமோ அவ்வளவு கரிசனை கொண்டிருக்கவில்லை.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக, 130 பேர் கொண்ட பெரும் குழுவோடு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய உரையின் போதும் பெரும் வெற்றிவாதத்தை முன்னிறுத்தியிருந்தார். அத்தோடு, மேற்கு நாடுகளை நோக்கிய தன்னுடைய ஒரு வகையிலான எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தார். அங்கு பான் கீ மூனைச் சந்தித்த போதும், மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தைகளே ஓங்கியிருந்தன.

குறிப்பாக, இறுதி மோதல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த தருஸ்மன் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அதிருப்தியை, பான் கீ மூன் ஏற்றுக் கொண்டிருந்தார். அதாவது, ‘தருஸ்மன் குழு, விசாரணைக்குழு அல்ல; அது எனக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவே” என்று, தலையை உள்ளிழுக்கும் ஆமையின் மனநிலையோடு பான் கீ மூன் பதிலளித்திருந்தார்.

பான் கீ மூனின் இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்திருக்கின்றார்கள். ‘இலங்கையைப் பொறுத்தவரை பான் கீ மூன், மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றார். ஆயுத மோதல்கள் முடிந்த பின், இலங்கைக்குச் சென்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்களும் மற்றவர்களும் தந்த நல்ல அறிவுரையை மீறி, அங்கே சென்றார். மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசாங்கம் நம்பகத்தன்மையைப் பெற, அந்த விஜயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினைச் சேர்ந்த பிராட் அடம்ஸ், பான் கீ மூன் இரண்டாவது பதவிக் காலத்துக்காக தெரிவு செய்யப்பட்ட போது விமர்சித்திருந்தார்.

பான் கீ மூனின் ஆளுமைத்திறன் குறைபாடு மற்றும் பக்கச்சார்ப்பு நிலைப்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. உலகின் மூத்த நிர்வாக அலுவலராக- இராஜதந்திரியாக இருக்கும் பான் கீ மூன், தான் ஆற்ற வேண்டிய பல விடயங்களில் கோட்டை விட்டிருக்கின்றார். உண்மையிலேயே, நீதியை நிலைநிறுத்த வேண்டிய பல சந்தர்ப்பங்களில் அவரின் ஆளுமையற்ற நடவடிக்கைகள், அநீதியின் நீட்சிக்கு உதவியிருக்கின்றன. குறிப்பாக, மியான்மார் அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தமை, இலங்கை விடயத்தில் கோட்டை விட்டமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இன்றைக்கு ஏழு ஆண்டுகள் கடந்து விட்டதன் பின்னராக, பான் கீ மூன் மீண்டும் இலங்கைக்கு வருகிறார். இப்போதும் நாடு, இரண்டு விதமான பிரதிபலிப்புக்களையே காட்டி நிற்கின்றது. ஆனால், அவற்றின் அளவுகள், குறிப்பிட்டளவு மாற்றமடைந்திருக்கின்றன. தெற்கில் கோலொச்சிக் கொண்டிருந்த போர் வெற்றி வாதம், நாளாந்த வாழ்வுச் சிக்கல்களுக்கு இடையில் சற்று மிதிபட்டு, அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கில், அரசியல் சூன்ய வெளியின் நீட்சியே இன்னமும் நீடிக்கின்ற போதிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அல்லது, அதற்கான எம்புதல்களைக் காண முடிகின்றது. அத்தோடு, தோல்வி மனநிலையிலிருந்து எழுந்து வர வேண்டியதன் அவசியம் பற்றிய உரையாடல்களையும் காண முடிகின்றது.

கடந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பின் பேரிலேயே, பான் கீ மூனின் இலங்கைக்கான இந்த விஜயம் நிகழ்கின்றது. ஆட்சி மாற்றமொன்றுக்குப் பின்னரான இன்றைய நாட்களை, பான் கீ மூன் மதிப்பீடு செய்து நற்சான்றிதழ் அளிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, புதிய அரசாங்கத்திடம் உண்டு. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், சீனா சார்பு நிலையெடுத்து, மேற்கு நாடுகளோடு பகைத்துக் கொண்டதன் பின்னரான நாட்களில், இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்டதாக மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இலங்கை மீது எழுந்த அழுத்தங்களை புதிய அரசாங்கம், விலக்கும் நடவடிக்கைகளில் மிக வேகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்போக்கிலேயே பான் கீ மூனின் இந்த விஜயமும் கொள்ளப்பட வேண்டும். தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் பான் கீ மூன், இலங்கை தொடர்பில் வெளியிடும் அறிக்கை கவனம் பெறும். அதில், எப்படியாவது நற்பெயரைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மைத்திரி- ரணில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது.

பான் கீ மூனின் இந்த விஜயத்தின் வெற்றிக் கனிகளை அறுவடை செய்யும் பணிகளில், வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர பெரும் முனைப்போடு ஈடுபட்டிருக்கின்றார். பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பிலான நிகழ்ச்சி நிரல்களை அவதானிக்கின்ற போதும், அதனை நன்றாக உணர முடிகின்றது. யாழ்ப்பாணத்துக்கும் காலிக்கும் பான் கீ மூனை அழைத்துச் செல்வதன் மூலம் நாட்டில் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் அற்ற ரீதியிலான அரசாங்கத்தின் அணுகுமுறையை காண்பிப்பதற்குக் காத்திருப்பதாக, கடந்த சில நாட்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த போது மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அத்தோடு, யாழ்ப்பாணம் வரும் பான் கீ மூன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனித்துச் சந்திப்பதற்கு அவகாசம் வழங்கப்படவில்லை. மாறாக, அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு ஒருவராக சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இதன்மூலம், வடக்கிலிருந்து எழும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலான விமர்சனங்களின் அளவினைக் குறைக்க முடியும் என்று மங்கள சமரவீர கருதுகின்றார்.

மங்கள சமரவீர, சர்வதேச ரீதியில் இலங்கைக்காக கடந்த சில மாதங்களாக பெரும் வெற்றிகளைப் பெற்று வந்திருக்கின்றார். குறிப்பாக, இலங்கை அரசாங்கம் மீதான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை, ஓர் அரசாங்கத்தின் மீதான குற்றமாகக் காட்டி மேற்கு நாடுகளின் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார். பதவிநீக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை, அரசொன்றின் குற்றங்களுக்கு பொறுப்பாளியாகிவிட்டு விலகுவதன் மூலம், இலங்கை மீதான அழுத்தங்களை விலக்கிக் கொள்ளலாம் என்பதில் புதிய அரசாங்கமும், மங்கள சமரவீரவும் குறியாகவே இருக்கின்றார்கள். அரச இயந்திரமொன்றின் குற்றங்களை அரசாங்கத்தின் குற்றங்களாக மாத்திரம் பதிவு செய்து தப்பித்தல் என்பது, சர்வதேச ரீதியில்- உலக ஒழுங்கின் போக்கில் பல நாடுகளில் நிகழ்ந்த ஒன்றுதான். ஆனால், இங்கு தமிழ் மக்கள் மீதான அநீதிகளுக்கான நீதியையும் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகளும் சேர்ந்து இசைந்தோடுவதுதான் ஜீரணிக்க முடியாதது. அந்தப் பதிவுகளின் நீட்சியாகவே பான் கீ மூனின் இந்த விஜயமும் இருக்கப் போகின்றது.

*பான் கீ முன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சர்கள் குழுவையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அலுவலகம் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரை நேற்று செவ்வாய்க்கிழமை காலை எழுதப்பட்டது.

புருஜோத்மன் தங்கமயில்