செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாக குண்டு வெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது

420 0

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வணிக வளாக குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ரஷியா நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் கடந்த 27ம் தேதி வெடிகுண்டு வெடித்தது. இதில் சிக்கி கர்ப்பிணிகள் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பினர் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளது.

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக 2015-ம் ஆண்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவத்தை அனுப்பியதால் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ரஷ்யாவை முக்கிய குறியாகக் கருதுகிறது.

இந்நிலையில், வணிக வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், வணிக வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அதிபர் புதினின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment