புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை – அமைச்சர் விஜயபாஸ்கர்

4375 25

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 51 இடங்களில் ‘108’ ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கிய இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை கருத்தில் கொண்டு அரசு தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது.

இதே போன்று 2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது சென்னையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், மெரினா கடற்கரை, நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 37 ஆம்புலன்ஸ்களும், நான்கு சக்கர ஆம்புலன்சும் மற்றும் 13 இரண்டு சக்கர ஆம்புலன்ஸ்களும், ஹாட் ஸ்பாட் என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது.

மேலும் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் தகுந்த வசதிகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று 108 சேவை மையம் கூடுதல் பளுவை எதிர்க்கொள்ள முடுக்கி விடப்பட்டுள்ளது, மக்கள் நல்வாழ்வுத்துறை சென்னை மாநகர காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படாத நிலையை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment