உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் ஜனவரி 11ஆம் திகதி முதல் தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அனுப்பிவைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் மூலமாக வாக்களிப்பவர்களிடத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப் பங்களை பரிசீலனைக்குட்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து ஜனவரி மாதம் 11ஆம் திகதி குறித்த வாக்காளர் இடாப்பில் உள்ள அனைத்து தபால் மூல வாக்காளர்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் தபால் அலுவலகங் களில் கையளிக்கப்படவுள்ளன.
இதனையடுத்து தபால் மூலமாக வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள் அனைவரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் தமது அலுவலகங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்கும். இதன்போது தேர்தல் திணைக்கள அதிகாரிகளும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகளும் காண்காணிப்பு நடவடிக்கைகளிலும், பொலிஸார், படையினர் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடவுள்ளனர். ஆகவே இத்தகைய பணிகளில் ஈடுபடுபவர்கள் 22 ஆம் திகதி தபால்மூலமாக தமது வாக்கு களை அளிக்க முடியும் என்றார்.

