பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் புதிய மனு தாக்கல்

422 0

3 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது என மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு நவாஸ் ஷெரீப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக அரசியல் சாசன மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்தது.

மேலும், அவரும் அவருடைய குடும்பத்தினரும் லண்டன் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அல் அஜிசியா உருக்காலை, ஹில் மெட்டல் எஸ்டாபிளிஸ்மென்ட் ஆகியவற்றில் செய்த முதலீடுகள் தொடர்பாக தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி அவர்கள் மீது 3 வழக்குகள், தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளன.

இவற்றை ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தனது அறையில் வைத்து விசாரித்த ஒற்றை நீதிபதி, 3 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது என மறுத்து கடந்த மாதம் 16-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு நவாஸ் ஷெரீப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக அரசியல் சாசன மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவரது சார்பில், வக்கீல் கவாஜா ஹாரிஸ் அகமது தாக்கல் செய்தார். அது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment