கவர்னர் ரோசையா பதவியில் நீடிப்பாரா?

363 0

201608311203102139_central-government-today-decide-TN-governor-post-continue_SECVPFஇன்றுடன் கவர்னர் ரோசையாவின் பதவி காலம் முடிவடைவதால், தமிழகத்தின் புதிய கவர்னர் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவுக்குள் வெளியிடுவார் என்று தெரிகிறது.

தமிழக கவர்னராக கே.ரோசையா கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி நியமிக்கப்பட்டார்.கவர்னர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இன்றுடன் ரோசையாவின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தின் புதிய கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா பா.ஜனதா மூத்த தலைவரும், மேல்-சபை தலைவருமான சங்கரமூர்த்தியை தமிழக கவர்னராக நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வந்தது. ஆனால் தமிழகம் – கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை இருப்பதால் சங்கரமூர்த்தியை நியமிப்பது ஏற்புடையதாக இருக்காது என்று கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது.

கவர்னர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு புதிய கவர்னர் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இதற்கு முன் ரோசையாவை தமிழக கவர்னராக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நியமித்து உத்தரவிட்டார்.

தற்போது இன்றுடன் ரோசையாவின் பதவி காலம் முடிந்த பின்பும் புதிய கவர்னர் பற்றிய அறிவிப்பு எதுவும் விடப்படவில்லை.

புதிய கவர்னர் நியமிப்பதாக இருந்தால் பழைய கவர்னர் தனது மாளிகையை காலி செய்வதற்கு 15 நாள் அல்லது 10 நாட்கள் கால அவகாசம் தேவை. கவர்னர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தபோது ரோசையா மாளிகையில் காலி செய்வதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

மேலும் பதவி காலம் முடிந்து செல்லும் கவர்னருக்கு மாநில அரசின் சார்பில் பிரிவுபசார விழா நடத்தப்படும். அந்த நிகழ்ச்சியும் இதுவரை நடைபெறவில்லை.

மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமூகமான உறவு நீடிப்பதால் ரோசையாவுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை அவருக்கு 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் வரை பதவி நீடிப்பு அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இன்று இரவுக்குள் இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

கவர்னர் ரோசையாவுக்கு தற்போது வயது 83 ஆகிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெமுரு என்ற ஊரில் 1933-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி பிறந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஆந்திராவில் பல முதல்-மந்திரிகளின் மந்திரிசபையில் இருமுறை போக்குவரத்து மந்திரியாகவும், ஒருமுறை உள்துறை மந்திரியாகவும், 4 முறை நிதி மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆந்திர சட்டசபையில் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். ஆந்திராவில் முதல்-மந்திரியாக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் ரோசையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவரது ஆட்சியின்போது தெலுங்கானா போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் அடுத்த 2 மாதத்தில் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். ரோசையாவுக்கு சிவலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தற்போது ரோசையாவின் வீடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அமீர்பேட்டையில் உள்ளது.