உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் தாய், மனைவி விசா மனு மீது நடவடிக்கை

5717 0

உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விண்ணப்பித்துள்ள விசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 47).

அவரது மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விரும்புகின்றனர். அவர்கள் வரும் 25-ந் தேதி ஜாதவை சந்தித்து பேச பாகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக அவர்களுக்கு விசா வழங்குமாறு டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்துக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் முகமது பைசல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் எப்போது விசா வழங்கப்படும் என்பது குறித்து அவர் தகவல் எதுவும் வெளியிடவில்லை.