விண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரும் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு: நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவிப்பு

352 0

பூமியைப் போலவே மனிதர்கள் உயிர் வாழக் கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள பல நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. தவிர வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகக் கூறப்படுவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், நமது சூரிய குடும்பத்தைப்போலவே, விண்வெளியில் மற்றொரு சூரிய குடும்பம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

அந்த நட்சத்திரக் கூட்டத்தில் ‘கெப்ளர்-90’ என்றழைக்கப்படும் சூரியனை (நட்சத்திரத்தை) 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர். எனினும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சூரிய குடும்பத்தில் உள்ள 8 கிரகத்திலும் மனிதர்கள் வாழக் கூடிய சூழல் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகங்கள் 2,545 ஒளி ஆண்டு தூரத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக் கின்றன.

இதுகுறித்து ஆஸ்டினில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் டெக்ஸாஸ் விண்வெளி ஆய்வாளர் ஆண்ட்ரூ வாண்டர்பர்க் கூறும்போது, ‘‘கெப்ளர்-90 நட்சத்திரக் கூட்டம், நமது சூரிய குடும்பத்தை ஒத்துள்ளது. சூரியனுக்கு அருகில் மிக சிறிய கிரகங்களும், வெளியில் மிகப்பெரிய கிரகங்களும் உள்ளன. இந்த சூரிய குடும்பத்தில் பூமியைப் போலவே பாறைகள் நிறைந்த ஒரு கிரகம் (கெப்ளர்-90ஐ) உள்ளது. ஆனால், அந்தக் கிரகம் சூரியனை 14.4 நாட்களில் சுற்றி வருகிறது. மேலும், மிகவும் வெப்பத்துடன் அந்த கிரகம் உள்ளது. அங்கெல்லாம் செல்வதை நினைத்து கூட பார்க்க முடியாது’’ என்றார்.

அந்த கிரகத்தில் சராசரியாக 800 டிகிரி பாரன்ஹீட் (426 செல்சியஸ்) வெப்பம் நிலவுவதாக நாசா கணித்துள்ளது. இது நமது சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்து உள்ள புதன்கிரகத்தில் நிலவும் வெப்ப நிலைக்கு நிகரானது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய சூரிய குடும்பத்தை கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி போன்றவற்றின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment