கைதுசெய்த 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும்: மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தல்

19306 0

கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து வருகின்றன.

இதற்கிடையே, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிகையாளர்களை யாங்கூன் போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதே போன்ற கருத்தை இங்கிலாந்து, ஸ்வீடன், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இது பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். எனவே தங்களது செய்தியாளர்களை மியான்மர் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.

Leave a comment