வேலூர் ஜெயிலில் இருந்து பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றம்

217 0

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் இருந்து சென்னை புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் தங்களது விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், பேரறிவாளனுக்கு தமிழக அரசு 2 மாதம் பரோல் வழங்கியது. இதையடுத்து பேரறிவாளன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பேரறிவாளன் மூட்டு வலி, சிறுநீரக தொற்றுநோயால் அவதிப்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலுடன் அடிக்கடி சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளன், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக தன்னை வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிறைத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 11.55 மணி அளவில் வேலூர் ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளனை சென்னை புழல் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

ஒரு மாதம் சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று வேலூர் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரறிவாளனை நேற்று அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். வெளியே வந்த அவர் ஜெயில் வாசலில் நிருபர்களிடம் கூறுகையில், எனது மகன் விடுதலைக்காக காத்திருக்கிறேன்.

வருகிற ஜனவரி மாதம் விடுதலை தொடர்பான வழக்கு வருகிறது. அதன் மூலம் என் மகனுக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Leave a comment