எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்துள்ளது: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் குற்றச்சாட்டு

261 0

எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்ததன் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் நடந்துள்ளதாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தலைமை செயலாளராக ராமமோகனராவ் இருந்து வந்தார். ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் ராமமோகனராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

பின்னர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகனராவ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அடுத்து வேறு பணிகள் வழங்கப்பட்டது. அதன்பிறகு பதவி ஓய்வு பெற்றார். தன்வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக ராமமோகனராவ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

கேள்வி: மிக உயர்ந்த பதவியில் இருந்த நீங்கள் வெளியேற்றப்பட்டது இதுவரை நடக்காது ஒன்று. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த வி‌ஷயத்தில் எனக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. அது ஒரு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்ததன் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத நிலையில் என்னை குறிவைத்து இந்த சம்பவம் நடந்தது. வருமானவரி சோதனை சம்மந்தமாக எனது பெயரில் எந்த வாரண்டும் கொண்டுவரவில்லை. அவர்கள் எனது மகன் சம்மந்தப்பட்ட வர்த்தகம் தொடர்பாக சோதனை நடத்த வந்தார்கள். ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் தங்கம் மற்றும் நகைகள் வீட்டில் இருந்தை கண்டறிந்தனர். சில சுயநலவாதிகளால் என்மீது அவதூறும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டன. தற்போதும் என்னை குறிவைத்து இந்த வேட்டை நீடித்துக் கொண்டிருக்கிறது.

சோதனையின் போது துணை ராணுவப்படையினரை ஏன் அழைத்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. என் மீதோ, எனது மகன் மீதோ எந்த வழக்கோ, விசாரணையோ, ஐ.டி. துறை அல்லது மற்ற துறைகளிடம் இல்லை. அந்த பிரச்சினைகளால் நானும், எனது குடும்பத்தினரும் பல மாதங்களாக மனவேதனையில் துடித்தோம்.

கே: இந்த ஆட்சியில் குட்கா தொடர்பாக மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது சம்மந்தமாக வருமான வரித்துறை விசாரணை பிரிவு டைரக்டர் பாலகிருஷ்ணன் உங்களையும், டி.ஜி.பி. அசோக்குமாரையும் சந்தித்ததாகவும், இந்த ஊழலில் மாநில மந்திரிகளுக்கு பணம் கொடுத்தது சம்மந்தமாக அறிக்கையை உங்களிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறதே? இது உண்மையா? அப்படியானால் அதன் மீது என்ன நடவடிக்கையை நீங்கள் எடுத்தீர்கள்?

ப: வருமானவரித்துறை முதன்மை இயக்குனர் என்னை 12.8.2016 அன்று சந்தித்தது உண்மை. அப்போது மாநில மந்திரிகளும், போலீஸ் அதிகாரிகளும் மற்றும் சிலரும் குட்கா உற்பத்தியாளர்களிடம் பணம் வாங்கியதாக தகவல்களை கொடுத்தார். மேலும், இது சம்மந்தமாக வருமான வரித்துறை சோதனை நடத்தும்போது போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நான் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு குறிப்பு அனுப்பினேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்க இருந்தார். இதுசம்மந்தமாக அனைத்து விவரங்களும் பதிவேடுகளில் உள்ளன. இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் உடல்நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மரணம் அடைந்து விட்டார்.

அதன்பிறகு நான் தலைமை செயலாளர் பதவியில் இருந்து திடீரென மாற்றப்பட்டேன். நான் பதவியில் இல்லாத நேரத்தில் வருமான வரித்துறை அறிக்கை சம்மந்தமாக என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.

கே: குட்கா ஊழல் சம்மந்தமாக வருமான வரித்துறை அறிக்கை வந்ததும் டி.ஜி.பி. அசோக்குமாரை விடுமுறையில் செல்ல ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறதே? அது உண்மையா? இந்த நிலையில் வருமான வரித்துறை அறிக்கை அவரது அலுவலகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறதே?

ப: குட்கா ஊழல் சம்மந்தமாக ஜெயலலிதா அறிந்து கொள்வதற்கு முன்பே டி.ஜி.பி. அசோக்குமார் இதுசம்மந்தமாக ஜெயலலிதாவுக்கு குறிப்பு அனுப்பி இருந்தார். ஆனாலும் அவர் ஏன் பதவியில் இருந்து விலகினார் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை ஜெயலலிதாவின் நம்பிக்கையை அவர் இழந்திருக்கலாம்.

ஊழல் கண்காணிப்பு இயக்குனரகம் தற்போது இந்த ஊழல் சம்மந்தமாக விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் என்னிடம் விசாரணைக்கு வழங்கப்பட்ட கேள்வி பட்டியலில் ஊழல் சம்மந்தமாக என்னிடம் பல தகவல்கள் இருப்பது போல சுட்டிக்காட்டி கேள்விகளை அமைத்து இருந்தனர். அது எனக்கு வருத்தத்தை தருகிறது. நான் எனது தலைமை செயலாளர் பணியை செய்தேன். நான் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியில் இல்லாத இந்த நேரத்தில் நான் தான் இந்த குற்றச்சாட்டு பற்றி நிரூபிக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள். இதற்கு தற்போது பதவியில் இருக்கும் அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும்.

கே: உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறுகிறீர்கள்? அதுபற்றி விளக்கமாக சொல்ல முடியுமா?

ப: நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 32 ஆண்டுகள் தமிழ்நாட்டில் நேர்மையாக பணியாற்றி இருக்கிறேன். நான் அப்பழுக்கற்றவன். எனது பணியை இந்த நாடே போற்றி இருக்கிறது. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்துபோதும், அதன்பிறகு அவர் இறந்துவிட்டபோதும் சட்டம்-ஒழுங்கை பேணுவதை நான் எடுத்த நடவடிக்கைகளை எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள். ஏராளமான மிக முக்கிய பிரமுகர்களையும், லட்சக்கணக்கான மக்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மெரினா பீச்சில் திரண்டார்கள். ஆனாலும் மோசமான ஒரு சிறு சம்பவம் கூட நடக்கவில்லை. அதேபோல வர்தா புயலின்போதும் சிறப்பாக பணியாற்றினேன். ஆனாலும் நான் செய்த பணிகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு என் மீது வைக்கப்பட்டுள்ளது. நான் ஐ.ஏ.எஸ். பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது முடிவு அல்ல. இது பொதுவாழ்க்கையின் தொடக்கம்.

கே: ஜெயலலிதா சிகிச்சையிலும், மரணத்திலும் ஏதேனும் சதி இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?

ப: இது தொடர்பான விசாரணை கமி‌ஷன் முன்பாக விரைவில் ஆஜராகி சாட்சியம் சொல்ல இருக்கிறேன். எனவே இந்த நேரத்தில் இதுபற்றி எதுவும் சொல்வது சரியாக இருக்காது. ஜெயலலிதா மரணத்தினால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர் மிகப்பெரிய தலைவர். ஜெயலலிதாவிடம் மிகவும் பாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்ததையே பலர் குற்றமாக பார்க்கும் சூழ்நிலை இப்போது உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment