காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி ஏற்றதால் பா.ஜனதா பயப்படுகிறது: திருமாவளவன்

349 0

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்பதைப் பார்த்து பாரதிய ஜனதா பயப்படுகிறது என திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சியான காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல்காந்திக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பின் காங்கிரஸ் கட்சியின் 16ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல்காந்தி கடின உழைப்பையும் அரசியல் தெளிவையும் சிறப்பாக வெளிப்படுத்திவந்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அவரது கோபத்தையும், அரசியல் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறையையும் இந்த நாடு பார்த்துள்ளது. பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க. வினர் அவரை எள்ளி நகையாடிய போதும், சிறுமைபடுத்திப் பேசிய போதும் அவர் அரசியல் நாகரீகத்தை எப்போதுமே விட்டுக் கொடுத்ததில்லை. அதுவே அவரது தலைமைத்துவத்துக்குச் சான்றாக உள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.க.வின் பிடியிலிருக்கும் குஜராத்தை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றும் என்கிற அளவுக்கு ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பதறிப்போன வகுப்புவாதிகள் தரம்தாழ்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

‘குஜராத் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறது’ என ஆதாரமற்ற அவதூறு ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அபாண்டமான பொய்யைக் கூறியதற்காக நாட்டு மக்களிடம் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பா.ஜ.க. எந்த அளவுக்கு அச்சப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு சான்றாக உள்ளது. வகுப்புவாதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பது எல்லோருக்குமே ஆபத்தானதாகும். காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருக்கும் ராகுல்காந்தி இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டி வகுப்புவாதிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.

திருமாவளவன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2016 மார்ச் 13 அன்று உடுமலைபேட்டை சங்கர் கூலிப்படையினரால் மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சங்கரும் கவுசல்யாவும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூலி கும்பலை வைத்து ஈவிரக்கமின்றி இந்த படுகொலையை செய்தனர். கூலிக்கும்பலின் கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்ற கவுசல்யா உயிர் தப்பினார்.

திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சங்கர் கொலை வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆணவக் கொலைகள் செய்யும் கும்பலுக்கும் கூலிக்கு கொலை செய்யும் கும்பலுக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் சாதி வெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த காட்டுமிராண்டி கலாச்சாரத்தை எதிர்த்து துணிந்து போராடிய கவுசல்யாவுக்கு இத்தீர்ப்பு மிகப்பெருமளவில் ஆறுதல் அளிக்கும்.

கவுசல்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அரசு வேலை வழங்க வேண்டுமெனவும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் மைய மாநில அரசுகள் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment