ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர், டி.டி. வி.தினகரன் அணி ஆகியோருக்கு இடையே 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
வெற்றியைத் தட்டிப் பறிப்பதற்காக அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் இடையே தீவிர போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரசாரம் செய்ய இன்னும் 6 நாட்களே கால அவகாசம் உள்ளது. இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் கட்சித் தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது.
இதுவரை வீதி, வீதியாக சென்ற தலைவர்கள், இனி வீடு, வீடாக செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக முக்கிய கட்சிகளின் வெளியூர் பிரமுகர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு சில வேட்பாளர்கள் பணம் கொடுப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி 3 தினங்களில் யாரும் எதிர் பாராத நாளில் திடீரென பணப்பட்டுவாடா நடைபெறும் என்று தெரிகிறது.
இதை அறிந்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணப்பட்டுவாடாவைத் தடுக்க பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரவில் வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்லக்கூடாது என்று ஏற்கனவே தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளரின் பிரசாரத்தையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்து வருகிறது.
வேட்பாளர்களின் செலவு கணக்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வேட்பாளர்கள் வரும்போது பட்டாசு வெடித்தால், கோலம் போட்டால் கூட அவையும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆங்காங்கே ரகசிய சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தியும் கண்காணித்து வருகிறார்கள்.
என்றாலும் இவை அனைத்தையும் மீறி மிகவும் நூதனமான, புதுமையான வழிகளில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்க கட்சிகள் ஓசையின்றி ஏற்பாடுகள் செய்துள்ளன. பெட்ரோல் பில், ஏ.டி.எம். சேவை, மளிகைப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்கள் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்க உள்ளதாக தெரிகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் ஆர்.கே.நகர் வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் பணம் வாங்கும் நிலையில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
எனவே சில வேட்பாளர்களிடம் இருந்து நூதனமான முறையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்க அத்தகைய வாக்காளர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஓட்டுப் போடுவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை எந்த வாக்காளராவது வாங்கியது தெரிய வந்தால், அவர்களது வீடுகளில் வருமான வரி சோதனையினர் அதிரடி சோதனை நடத்துவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வேட்பாளர்கள், ஆர்.கே.நகர் தொகுதிக்குள் பணத்தை வினியோகம் செய்யாமல் பக்கத்து தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களின் உறவினர்களிடம் பணத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது.
அதுபற்றி தெரிய வந்தால் வாக்காளர்களின் உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துக்கு பணப்பட்டு வாடா தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் வாக்காளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பற்றி ஆலோசிககப்பட்டு வருகிறது.
வாக்காளர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துவது குறித்து சென்னையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வாக்காளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த குழுவினர் ஆர்.கே.நகர் தொகுதியில் ரோந்து சுற்றி வந்தபடி உள்ளனர். வாக்காளர்கள் பணம் வாங்குவது பற்றி தெரிய வந்தால் அவர்கள் உடனே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவினத்தை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமையில் வருமான வரித்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

