வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை,இது துரதிஸ்ர வசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.சிங்களவர்கள் எமக்கு அநீதி இழைப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்துக் கொண்டு எம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தமிழர்கள் அநீதி இழைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்திருப்பதுடன் அந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்கள் வட்டம் ஏற்பாடு செய்த தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளில் இந்த தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு வட மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் தலைவருமான அயூப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்றது.
யாழ் மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிற்கிடையில் இன ஐக்கியத்தினை வலியுறுத்தும் விதமாகவும் நல்லுறவை பேணுவதற்கு அடையாளமாகவும் இம்மாநாடு இடம்பெற்றது.
முஸ்லிம் மக்கள் யாழ் மாவட்டத்தல் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் விதமான கொள்கைப்பிரகடனம் ஒன்றையும் வட மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் வாசித்து உரையாற்றினார்-
அத்துடன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையினை வலியுறுத்தி அரசியல் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டனர் -குரல்-
வடமாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா,மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா,இம்மானுவல் ஆர்லல்ட்,அரியகுட்டி பரம்சோதி உள்ளிட்ட பலரும் இநகழ்வில் கலந்துகொண்டனர்

