அமைதிக்கான நோபல் பரிசை ஐகேன் அமைப்பின் தலைவர் பெற்றார்

283 0

இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் இன்று பெற்று கொண்டார்.

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு  International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, ஏராளமான அணு ஆயுதங்களை குவித்து வைத்திருந்த ஈரான் நாட்டை அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையொப்பமிட வைத்ததிலும், பிறநாடுகளில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்ததிலும், வடகொரியாவின் அணு ஆயுத வெறிக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்ததிலும் இந்த அமைப்பின் பணி முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ‘ஐகேன்’ அமைப்பு தேர்வாகியுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் இதற்கான அறிவிப்பை அந்நாட்டு நோபல் கமிட்டியின் தலைவர் பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தார்.

மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கவும், அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்க பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்த உறுதுணையாக இருந்ததற்காகவும் ‘ஐகேன்’ அமைப்புக்கு இந்த பரிசு அளிக்கப்படுவதாக பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் இன்று நடைபெற்ற விழாவில் அமைதிக்கான நோபல் பரிசையும், பாராட்டு பட்டயத்தையும்  ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் மற்றும் பிரதிநிதி செட்ஸுக்கோ துர்லோ ஆகியோர் இன்று பெற்று கொண்டனர்.

முன்னதாக, ஏற்புரையாற்றிய பீட்ரைஸ் ஃபிஹ்ன், வடகொரியாவில் நிலவிவரும் மிக மோசமான அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக கவலை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகட்டும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகட்டும் இந்த உலகை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களான இவர்களிடம் உள்ளது. இப்படி ஒரு அதிகாரம் யாரிடமும் இருக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment