கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காக பிரிவடைந்து செல்லக்கூடாது-இரா.சம்பந்தன்

384 0

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காகப் பிரிவடைந்து செல்லக்கூடாது.நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடத்தில் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இக்கூட்டத்தில் ஆசனப் பங்கீடு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர் ஒருவர் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் நாம் தனித்தனியாகப் போட்டியிட்ட பின்னர் அடுத்த கட்டத்தினைப் பிறகு பார்ப்போம் என்று கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சமயத்தில் தான் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்

நாங்கள் கொள்கைகளால் ஒன்றுபட்டு அரசியல் பணிகளை மக்களுக்காக எடுத்து வருகின்றோம். சில்லறை விடயமான ஆசனப் பங்கீட்டை மையப்படுத்தி பிரிந்து செல்வதானது பொருத்தமற்றதாகும்.

நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அரசியல் பயணத்தில் நாம் எமது இலக்கினை அடைவதற்கு ஒற்றுமையும் அதனால் கிடைக்கும் பலமும் அவசியமாகும்.

ஆகவே முரண்படாதீர்கள், ஒற்றுமையாக இருங்கள், பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியும். விட்டுக் கொடுப்பதற்கு முயற்சியுங்கள்.

நாம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு பிரதான விடயங்களுக்காக ஒற்றுமையாக ஒத்துழைப்புடன், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment