மூப்பனாரை மறக்காத முன்னாள் த.மா.கா நிர்வாகிகள்

313 0

201608301031245860_G-K-Moopanar-15th-Memorial-Day-Peter-alphonse-tribute_SECVPFதேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்துக்கு காலை 6 மணியளவில் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் ஆகியோர் காங்கிரஸ் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா வை தொடங்கியதும் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பால சுப்பிரமணியன், விசுவநாதன், மகேஸ்வரி, ஞானசேகரன் உள்பட பல முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே.வாசனுடன் சென்றார்கள்.

அவர்கள் அனைவரும் த.மா.கா.வில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்கள்.இந்த நிலையில் த.மா.கா முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. தேர்தலில் ஜி.கே. வாசன் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவுகள் கட்சிக்குள் பிரச்சனையை உருவாக்கியது.

தேர்தலிலும் த.மா.கா வெற்றி பெறாததால் ஞானதேசிகன், கோவை தங்கத்தை தவிர மற்ற நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார்கள். பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் உள்பட பலர் மீண்டும் காங்கிரசில் இணைந்தனர்.

அவர்கள் ஜி.கே.வாசனுக்கு எதிராக இருந்தாலும் மூப்பனார் மீது தனிமரியாதையும், பாசமும் வைத்துள்ளார்கள்.மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது இவர்களெல்லாம் அவரது தலைமையை ஏற்று நடந்தவர்கள். இன்றும் தங்கள் அரசியல் வழிகாட்டியாக மதிக்கிறார்கள்.

இன்று மூப்பனாரின் 15-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. எனவே பிரிந்து சென்றவர்களும் அவருக்கு மரியாதை செலுத்த முடிவு செய்தனர்.தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை 9 மணி முதல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு த.மா.கா.வினர் ஏற்பாடு செய்தனர்.

இதனால் முன் கூட்டியே அதிகாலை 6 மணியளவில் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் ஆகியோர் காங்கிரஸ் தொண்டர்களுடன் மூப்பனார் நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்கள்.

அவருடன் வில்லிவாக்கம் சுரேஷ், இல.பாஸ்கரன், எஸ்.டி நெடுஞ்செழியன், ஆலந்தூர் குமார், மயிலை தரணி உள்பட பலர் சென்று மரியாதை செலுத்தினார்கள்.அப்போது அங்கு ஒரு சில த.மா.கா தொண்டர்கள் முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்கள் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்களை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தனர்.