தேர்தல் பார்வையாளர்கள் புகார்: ஆர்.கே.நகரில் மேலும் அதிகாரிகள் மாற்றம்?

255 0

தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் பார்வையாளர்கள் அளித்துள்ள புகாரால் ஆர்.கே.நகரில் மேலும் சில உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.

வழக்கமாக ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கும் போது வெளிமாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் செலவின பார்வையாளர் ஒருவர் என 2 பேர் மட்டுமே பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே இந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் 2 பொது பார்வையாளர்கள், 3 செலவின பார்வையாளர்கள், 2 போலீஸ் பார்வையாளர்கள் என 7 பேர் வெளி மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது பார்வையாளராக ஐ.ஏஸ்.அதிகாரிகள் கமலேஷ் குமார், அல்கா ஸ்ரீவஸ்தவா ஆகியோரும், போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரிகள் குர்ஷீத் அகமத், இமானுவேல் கே.முய்லா ஆகியோரும் செலவின பார்வையாளர்களாக குமார் பிரணவ், பி.ஜி.கிருஷ்ணன், ஷீல் ஆஷீஸ் ஆகியோர் ஆர்.கே.நகர் வந்து தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்த தினசரி நடவடிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கையாக அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அளித்துள்ள அறிக்கையில், “ஆர்.கே.நகர் தொகுதியில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள மாநில போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை” என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சமீபத்தில் ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போதுள்ள சென்னை மாநகர கமி‌ஷனருக்கு கீழ் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட மறுக்கிறார்கள். ஆர்.கே.நகர் பகுதியில் உள்ளவர்களை தவிர வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது.

இதை சம்பந்தப்பட்ட போலீசாரோ, மாநகராட்சி அதிகாரிகளோ சோதனை செய்வதில்லை. அத்துமீறி ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வந்ததாக 3 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து கண்டித்தார்.

விஷால் வேட்பு மனு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தேர்தல் பார்வையாளர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் சிலரையும், சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a comment