லட்சத்தீவு கவரொட்டியில் மீட்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி வந்தடைந்தனர்

340 0

ஒக்கி புயல் காரணமாக திசைமாறி லட்சத்தீவு சென்ற 45 மீனவர்கள் மீட்கப்பட்டு, இன்று காலை கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

ஒக்கி புயல் கடந்த மாதம் 30-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடியது. கன்னியாகுமரி கடல் அருகே மையம் கொண்டிருந்த புயல் 70 கி.மீட்டர் வேகத்தில் வீசியதால் ஆழ்கடலில் மீன்பிடித்த ஆயிரக்காணக்கான மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் திணறினார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் திசைமாறி லட்சத்தீவு, மகாராஷ்டிரா போன்ற இடங்களுக்கு சென்றனர். அங்குள்ள அதிகாரிகள் அவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் சொந்த மாநிலம் திரும்ப தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
வெளி இடங்களில் தஞ்சமடைந்த மீனவர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 45 மீனவர்கள் லட்சத்தீவு கவரொட்டி பகுதியில் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 10.40 மணியளவில் 45 மீனவர்களும் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி, தமிழக அரசு அறிவித்த 2500 ரூபாயை ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கினார். கரை சேர்ந்த மீனவர்கள் அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு செல்கிறார்கள்.

Leave a comment