கொள்கை சார்ந்த மாற்றுத்தரப்பை மேற்குலகு விரும்பவில்லை!

290 0

தமிழர் தாயகத்தில் கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு பலமான தரப்பு ஒன்று தோற்றம் பெற்றுவிடக்கூடாதென்பதில் இந்திய மற்றும் மேற்குலக தரப்புக்கள் முழு அளவில் ஆர்வம் காட்டிவருவது இம்முறை அப்பட்டமாக அம்பலமாகியிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொ ன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இத்தரப்புக்கள் கொழும்பை தாண்டி இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொள்கை சார்ந்த எமது கட்சி போன்றவை அவ்வாறான மாற்றுத்தரப்பாக உருவாகிவிடக்கூடாதென்பதில் அவை கூடிய அக்கறை கொண்டுள்ளன.தாம் சொல்வதை கேட்கின்ற தமது தாளத்திற்கேற்ப ஆடுகின்ற தரப்புக்களே அவர்களிற்கு தேவையாகவுள்ளது.

இத்தரப்புக்களின் சதிவலையினுள் வீழ்த்தப்பட்டு ஏமாற்றப்பட்டே நண்பரும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியிடையே கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுக்கள் நடந்த போது தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரியினதோ ஏனையவர்களதோ தலையீடுகள் இக்கூட்டினில் இருக்காதென தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய நிகழ்வுகளை பார்வையிட்ட போது சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சிலர் ஓரமாக இருக்க வீ.ஆனந்தசங்கரியே எல்லாமுமாக இருந்திருந்தார்.

இதன் மூலம் நண்பரும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரனும் நாமும் ஏமாற்றப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது கூட்டமைப்பினர் தமது சொந்த மக்களிடம் போவதற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தேவைப்படும் சூழலே தற்போதிருக்கின்றது.

இத்தகைய நிலையில் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் மக்களது வாக்குகளை அறுவடை செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கொள்கை பற்றுக்கொண்ட மாற்று தரப்பு உருவாவதை இந்திய மற்றும் மேற்குலக தரப்புக்கள் விருப்பங்கொண்டிருக்கவில்லை.

இதனாலேயே தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியை அவர்கள் முன்னிலைப்படுத்துகின்றார்கள். தேவையெனில் இதனுள் டெலோ,புளொட் கூட இணைந்து கொள்ளலாம்.

ஆனால் சுரேஸ்பிறேமச்சந்திரன் போன்றவர்கள் ஏமாற்றப்பட்டு அதனுள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை வேதனைக்குரியதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment