கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு

269 0

கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன.மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை மேற்கொண்டது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரை அண்டிய பள்ளிமுனை பகுதியில் இரண்டரை ஏக்கர் கொண்ட காணியில் பத்தொன்பது  மீனவ குடும்பங்களின் வீடுகளுடன் காணியையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் தாங்கள் எங்கள் பூர்வீக இடத்தில் மீள்குடியேற முடியாது தவிப்பதாகவும் தெரிவித்து காணியை விடுவிக்கக்கோரி பாதிப்படைந்துள்ள மீனவ குடும்பங்கள் மன்னார் மாவட்ட நீத்மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ் வழக்கானது 11.02.2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இவ் வழக்கின்போது கடற்படையினரின் தேவைக்கென அதற்கருகாமையில் இருக்கும் அரச காணியையும் மக்களின் காணியில் ஒரு பகுதியையும் விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும்  அதேநேரத்தில் விட்டுக் கொடுக்கப்படும் தனியார் காணிகளுக்கு பாதிப்புக்குள்ளாகியிருப்போருக்கு அவர்களின் இல்லிட வசதிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணி வழங்குவதற்காகவும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வீடுகளையும் காணிகளையும் மீளப்பெறும் நோக்குடன் இக் காணி அளவை இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை (07.12.2017) இடம்பெற்ற இவ் காணி அளவையின்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸ், மக்கள் சார்பில் சட்டத்தரனி சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன், பங்குத் தந்தை அருட்பணி ஸ்ரீபன் அடிகளார், கடற்படை அதிகாரிகள் வழக்குத் தொடுத்திருந்த பொதுமக்கள், கிராம அலுவலகர் முன்னிலையில் மன்னார் பிரதேச செயலக நில அளவையாளர் நிக்சன், காணி உத்தியோகத்தர் ஆகியோர்களால் இக் காணிகள் அளவை செய்யப்பட்டது.

இதன் அறிக்கையை அடுத்த தவணையின்போது நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்பே இரு சாராரின் கருத்துக்களின் நிலையை அறிந்து இவ் வழக்கு முடிவுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment