பாகிஸ்தானுக்கு அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை

350 0

பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்களே தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட 20 தீவிரவாத இயக்கங்கள் அந்த நாட்டிலும், ஆப்கானிஸ்தானிலும் இயங்குவதாக அமெரிக்கா நம்புகிறது.

தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும், அவர்களின் புகலிடங்களை அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு கொள்கையை அறிவித்து உரையாற்றியபோது, “பாகிஸ்தானுக்கு பில்லியன் கணக்கில் (பல்லாயிரம் கோடி கணக்கில்) நாம் நிதி தருகிறோம். அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அந்த தீவிரவாதிகளுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும் உள்ளது. தலீபான் மற்றும் இன்ன பிற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக திகழ்ந்து கொண்டிருந்தால், அதை நாம் வெறுமனே இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என எச்சரித்தது நினைவுகூரத்தக்கது. ஆனாலும் பாகிஸ்தான் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில், அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ.யின் இயக்குனர் மைக் போம்பியோ, கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது அவர், “தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை என்றால், நாங்களே அங்கு உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம். அவர்களின் பதுங்குமிடங்களை அழிப்போம். இந்த நிலைப்பாட்டை தெரிவிக்கத்தான் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், அங்கு செல்கிறார். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், அங்கு தீவிரவாதிகளின் புகலிடங்கள் இனி இருக்காது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறினார்.

Leave a comment