ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம்

7373 0

624654Human_Rightsகடந்த ஜெனீவா அமர்வில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னேற்றம் காணப்படாத தீர்மானங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெளிவாகக் குறிப்பிடவேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இதில் கடந்த ஆண்டு சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக வாய்மூல அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. போரம் ஏசியா, பிரான்சிஸ்கன்ஸ் இன்ரநசனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக ஜூரிகள் ஆணைக்குழு, அனைத்துலக வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான அனைத்துலக அமைப்பு, அனைத்துலக மனித உரிமைகள் சேவை ஆகிய அமைப்புகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இன்னமும் நிறைவேற்றப்படாத விடயங்கள், எந்தெந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன, உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் போன்ற முக்கிய விடயங்கள் வாய்மூல அறிக்கையில் குறிப்பிடவேண்டுமெனவும் இந்த அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. அத்துடன் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தாம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment