திமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விஷாலுக்கு வாழ்த்து சொல்வதா?- குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்

396 0

திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் போது விஷாலுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார், அவருக்கு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு வாழ்த்து சொன்னார்.

இதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ள தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் கராத்தே தியாகராஜன், ”திமுகவுடன் கூட்டணி அமைத்து வேட்பாளரும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் விஷாலுக்கு வாழ்த்து சொல்வது சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கராத்தே தியாகராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”திமுகவிலிருந்தபோது அங்குள்ள தலைவர்களிடையே குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி வெளியே தள்ளப்பட்ட குஷ்புவுக்கு, காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்து அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவியும் கொடுத்தது.

அந்தப் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டிய குஷ்பு காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறார். நவ.19-ம் தேதி நடந்த இந்திராகாந்தி பிறந்த நாள் விழாவில் பேசிய குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் காங்கிரஸ் கட்சியின் நிரந்தரத் தலைவர் என்று பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அப்படியென்றால், சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசர் என்ன பார்ட் டைம் தலைவரா? காங்கிரஸ் கட்சியில் பதவி பெற்றுக்கொண்டு பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குஷ்பு தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி அனுமதி பெற்று, திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது.

திமுக செயல் தலைவர் தலைமையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பிரகாசமான வெற்றி வாய்ப்புகளுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

விஷால் மட்டுமல்ல யார் போட்டியிட்டாலும் மண்ணை கவ்வுவார்கள், திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது, என்று அறிவிக்க வேண்டிய குஷ்பு, வாழ்த்து வேறு ஆதரவு வேறு என்று சப்பைக்கட்டு கட்டுகிறார். நடிகர் சங்கத்தேர்தலில் வாழ்த்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. கூட்டணி கட்சி தேர்தல் களத்தில் இருக்கும்போது இப்படி திட்டமிட்டு வாழ்த்து சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

எனவே தொடர்ந்து குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும் குஷ்பு மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

Leave a comment