நிர்மலா சீதாராமன் நாளை கன்னியாகுமரி வருகை!

333 0

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை வருகை தர உள்ளார்.

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

இதனால் போக்குவரத்து முடங்கியதோடு, மின்சார சப்ளையும் துண்டிக்கப்பட்டு மாவட்டம் இருளில் மூழ்கியது. தற்போது அங்கு நீர் வடிய தொடங்கி இருக்கிறது. புயல்-மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து சென்று விட்ட போதிலும் கடல் இன்னும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, முட்டம், தேங்காய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர்.

அவர்களில் கணிசமான பேர் கரைக்கு திரும்பிவிட்ட நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை. நடுக்கடலில் புயல்-மழையில் சிக்கிய அவர் களுடைய கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கண்டுபிடித்து மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான நிரீஷக், ஜமுனா, சாகர்த்வானி, ஷர்துல், சாரதா உள்ளிட்ட 8 கப்பல்கள், 5 விமானங்கள், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், 2 விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன.

கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் நடுக்கடல் பகுதிக்கு சென்று மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள். மீனவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க கோரி சின்னத்துறை என்ற இடத்தில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவர்களும், ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பணிகளை பார்வையிடவும், நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தவும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை வருகை தர உள்ளதாக தமிழக வருவாய் துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a comment