மராட்டிய மாநிலத்தில் நோயாளியின் வயிற்றில் இருந்து 72 நாணயங்கள் அகற்றப்பட்டன

15378 0

மராட்டிய மாநிலத்தில் நோயாளியின் வயிற்றுக்குள் இருந்த 72 நாணயங்களை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தோரட்படா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண சோமல்யா சம்பார்(வயது 50). மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை நாசிக் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து பார்த்தனர். அப்போது சோமல்யாவின் வயிற்றில் ஏராளமான நாணயங்கள் கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, டாக்டர் அமித் கீலே தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 3½ மணி நேரம் நடந்தது. அப்போது அவருடைய வயிற்றுக்குள் இருந்த 72 நாணயங்களை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

இதுபற்றி டாக்டர் அமித் கீலே கூறுகையில், “சோமல்யாவுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாணயங்களை விழுங்கும் பழக்கம் இருந்துள்ளது. பல நேரங்களில் அவை இயற்கை உபாதையுடன் தானாக வெளியேறி இருக்கிறது. ஆனால் பல நாணயங்கள் வெளியேறாமல் அப்படியே தங்கியுள்ளது. இதனால்தான் அவருக்கு தொடர் வாந்தி, அஜீரணக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார்” என்றார்.

Leave a comment