14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம்

282 0

மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் நேற்று 14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 556 டாக்டர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, சென்னையில் கடந்த 17, 18-ம் தேதிகளில் நடந்தது. நேர்முகத் தேர்வில் பங்கேற்ற மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்த டாக்டர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

இதற்கிடையே, இந்த நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அரசு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் கலந்தாய்வை எம்ஆர்பி கலந்தாய்வுக்கு முன்பு நடத்த வேண்டும். நடந்து முடிந்த அனைத்து எம்ஆர்பி நேர்முகத் தேர்வு கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும். எம்ஆர்பி மூலம் பணியமர்த்தப்படும் டாக்டர்களை கட்டாய கிராமப்புற சேவைக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 17-ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். இதனால் டிஎம்இ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a comment