ஈரானை மீண்டும் உலுக்கிய பூகம்பம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

230 0

ஈரானின் கெர்மான் நகரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில்  இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர்.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்தது. பின்னர் 6.0 ரிக்டர் என திருத்தி அறிவிக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், கடுமையான சேதம் ஏற்படும். எனினும், உயிரிழப்போ சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியானது.

இதேபோல் கடந்த 12-ம் தேதி ஈராக் எல்லையை ஒட்டியுள்ள ஈரான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இரு நாடுகளிலும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leave a comment