கன்னியாகுமரியை விட்டு விலகி சென்றது ஒக்கி புயல்: லட்சத்தீவை நோக்கி நகர்கிறது

229 0

குமரிக்கடலை விட்டு விலகிச் சென்ற ஒக்கி புயல் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஒக்கி புயல் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் மேற்கு-தென்மேற்கே மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்நிலையில், ஒக்கி புயலானது குமரிக் கடல் பகுதியில் இருந்து இன்று விலகிச் செல்லத் தொடங்கியது. மேலும் வலுப்பெற்ற புயல், தற்போது திருவனந்தபுரத்திற்கு மேற்கே 230 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரிக்கு இருந்த புயல் பேராபத்து நீங்கி உள்ளது.

எனினும் தென் மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். தெற்கு கேரள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். தமிழக உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், தென்தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் அடுத்த 36 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு மற்றும் கேரளாவின் தென் பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment