ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் நலன் காக்க வருமான வரியில் கூடுதல் சலுகைகள்: வாசன் வலியுறுத்தல்

223 0

அரசு ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், மிகவும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான வருமான வரியில் அதிக சலுகைகள் வழங்கி அவர்கள் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுவோரின் வயது 60-க்கு மேல் 80 வரை இருந்தால் அவர்களை மூத்த குடிமக்கள் என்றும், 80 வயது மற்றும் அதற்கு மேல் இருந்தால் அவர்களை மிகவும் மூத்த குடிமக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். 60 முதல் 80 வயதுடைய மூத்த குடிமக்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருந்தால் அவர்களுக்கு வருமான வரி கிடையாது. அதற்கு மேல் இருந்தால் 5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். 80 மற்றும் அதற்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. இது வரவேற்கத்தக்கது.

மிகவும் மூத்த குடிமக்கள் போல மூத்த குடிமக்களுக்கும் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பதை வரும் நிதியாண்டு முதல் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள மக்களில் சுமார் 9 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் எனவும், இந்த சதவீதம் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, அரசு ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், மிகவும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான வருமான வரியில் அதிக சலுகைகள் வழங்கி அவர்கள் நலன் காக்க வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a comment