மாவீரர் நாள் நியூசிலாந்து – 2017

255 0

மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்ஆகும். இம்மாவீரர்கள் எம் வரலாற்றின் அழியா நினைவுச் சின்னங்கள். எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம் செய்த தியாச்சுடர்கள்.இவர்களின் உன்னத தியாகத்தை போற்ற எமக்கு கிடைத்த ஒரு உன்னத நாளே இம் மாவீரர் நாள். இம்மாவீரர் நாள் வழமை போல் இம்முறையும் நியூசிலாந்து மண்ணிலே கார்த்திகை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் , மவுண்ட் ரொஸ்கில் போர் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவீரர் 2ம் லெப் அமுதவள்ளி அவர்களின் சகோதரன் சர்வேஸ்வரன் அவர்கள் பொதுச்சுடரை ஏற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்துதேசியக் கொடியினை மகளீர் அணியின் பொறுப்பாளர் சுமதி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிதி பொறுப்பாளர் யோகராசா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை முகிலன் மற்றும் 2ம் லெப் முகில் ஆகியோரின் சகோதரி மதி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் எழுந்து அகவணக்கம்செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் மலர் தூவி தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேசிய தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள்உரையின் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து சிறப்புரையினை மாவீரர் திலகா அவர்களின் சகோதரர் துறை மாஸ்டர் அவர்கள் நிகழ்த்தினார். தனது உரையில் மாவீரர்களின் வலிகள் பற்றியும், அவர்களின் அளப்பரிய தியாகங்களை பற்றியும் எமது போராடடம் பற்றியும் கூறினார்.

தொடர்ந்து மாவீரர் தியாகங்களை காட்டும் அழகு நடனங்கள், உணர்ச்சி மிகு கவிதைகளும் பேச்சுக்களும் பாடல்களும் இடம்பெற்றது.இறுதியாக தமிழீழ எழுச்சிப்பாடல் இசைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. 2009ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு பின்னர் மக்களும் முன்னாள் போராளிகள் பலரும் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து இம்முறை மாவீரர் நாள் நூற்றுக்கணக்கான மக்களுடன் மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment