சர்வதேச நீதிபதி தேர்தலில் தோல்வி: ஐ.நா. தூதரை அதிரடியாக மாற்றியது பிரிட்டன்

204 0

சர்வதேச நீதிபதி தேர்தலில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததையடுத்து, ஐ.நா.வுக்கான தூதரை பிரிட்டன் அரசு மாற்றி உள்ளது.

நெதர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள 15 நீதிபதிகளில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐ.நா. பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளை தேர்வு செய்வார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டு 5 நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள ஒரு நீதிபதி இடத்துக்கு சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதியாக இருந்த இந்தியர் தல்வீர் பண்டாரியும் (வயது 70), பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும் (62) போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடந்த தேர்தல்கள் முடிவில் தல்வீர் பண்டாரி வெற்றி பெற்றார்.  இதன்மூலம், சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக  பிரிட்டன் நீதிபதி இடம்பெறவில்லை.

இந்த அவமானகரமான தோல்வியால் பிரிட்டன் அரசு கடும் அதிப்தியில் இருந்தது. இந்நிலையில், ஐ.நா. தூதர் மேத்யூ ரைகிராப்டை மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக கரேன் பியர்ஸ் என்ற பெண்மணியை நியமித்துள்ளது. ஐ.நா. தூதர் பதவிக்கு வரும் முதல் பிரிட்டன் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரேன் பியர்ஸ், இதற்கு முன் நியூயார்க்கில் ஐ.நா.வின் நிரந்தர துணை பிரதிநிதியாக பணியாற்றி உள்ளர். ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியாக பங்கேற்றார். இதனால் அவருக்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கரேன் பியர்ஸ் நியமனத்துக்கான எந்த காரணத்தையும் ஐ.நா.வுக்கான பிரிட்டன் ஆணையம் தெரிவிக்கவில்லை.

தற்போதைய தூதரான ரைகிராப்ட் ஜனவரி மாதம் லண்டன் திரும்பியதும், தனது பொறுப்பை கரேன் பியர்சிடம் வழங்குகிறார். பின்னர் சர்வதேச மேம்பாட்டு துறையின் நிரந்தர செயலாளர் என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

Leave a comment