சென்னையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாளையையொட்டி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொண்டாடினார்.
சென்னையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி சீமான் கொண்டாடினார்.
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்களுக்கு அவர் சாக்லேட் வழங்கினார்.
இது தொடர்பாக சீமான் கூறும்போது, தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டை, இன்று கட்சியினருக்கு இனிப்பாக வழங்கினேன் என்று தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்ததான முகாமை நடத்தினர்.
வில்லிவாக்கத்தில் மாவட்ட செயலாளர் வாகைவேந்தன் தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் ஆர்.கே.நகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசன், நிர்வாகிகள் ராஜா, பாலாஜி, பாலு, ராம், உமாசங்கர், ஹரீஷ், அஜித், ஜான், பால் தினகரன் பங்கேற்றனர்.
ஆவடி இந்து கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமுக்கு நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் நல்ல தம்பி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சரவணன், மணிகண்டன், அருள் பிரகாஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.இதில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். திருவள்ளூர் பஜார் வீதியில் மாநில செய்தி தொடர்பாளர் செந்தில்குமார் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ரத்ததானம் செய்தனர்.

