ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

367 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலை கண்காணிப்பதற்காக 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதி கடந்த 11 மாதங்களாக காலியாக இருக்கிறது.

ந்த தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21-ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். உதவி தேர்தல் அதிகாரிகளாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் எஸ்.முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 2 பேரும் பொறுப்பு ஏற்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இவர்களுக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுக்களை அளிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். டிசம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை), 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.

5-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 7-ந் தேதி ஆகும். அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே செல்லலாம் என்றும், அவை 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன் நேற்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் முதல் நாளான இன்று அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், சுயேச்சை வேட்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கலைக்கோட்டுதயம் 29-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் 29-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இன்னும் 2 நாட்களுக்குள் அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே, அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி முடிவு செய்யப்படும்.

இதேபோல், சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரனும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதால், தேர்தல் களம் இப்போதே அங்கு சூடுபிடித்து உள்ளது.

டி.டி.வி.தினகரன் டிசம்பர் 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் ஒரு பக்கம் தொடங்கினாலும், மற்றொரு பக்கம் பிரசாரத்திற்கு வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையே வீதி, வீதியாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கத்தில், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

தேர்தலை கண்காணிக்க 2 பொது பார்வையாளர்கள், 5 செலவின பார்வையாளர் கள், 2 காவல்துறை சட்டம்- ஒழுங்கு பார்வையாளர்கள் என மொத்தம் 9 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், காவல்துறை சட்டம்- ஒழுங்கு பார்வையாளர்களில் ஒருவரான இம்மானுவேல் கே.முய்வா நேற்று முன் தினமே சென்னை வந்து பணியை தொடங்கிவிட்டார். மற்ற பார்வையாளர்கள் டிசம்பர் 4-ந் தேதிக்கு பிறகு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment