இலங்கைக் குடும்பத்துக்காகத் திரண்ட நியூஸிலாந்துவாசிகள்!

340 0

நாடுகடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பத்துக்கு ஆதரவாக நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுன்வாசிகள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த எட்டு வருடங்களாக நியூஸிலாந்தின் குவின்ஸ்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது.

மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்தபோதும் அதை அரசு நிராகரித்தது. இந்நிலையில், தினேஷா மற்றும் அவரது குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில், இன்று (26) தினேஷாவின் 42வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பகுதிவாசிகள் பலர் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகவும் தினேஷாவுக்கு சார்பாகவும் பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் பேரணியை க்ளூதா சௌத்லேண்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஹமிஷ் வோக்கர் ஏற்பாடு செய்திருந்தார்.

“எமக்கு நேர்ந்த அநீதியை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்றும் எமக்குச் சார்பாகப் பேசவும் ஆளில்லை என்றும் எண்ணியிருந்தேன். ஆனால், இந்தத் திடீர் பேரணியால், என் மீது அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது” என்று உணர்ச்சிவசப்பட்டார் தினேஷா!

பேரணிக்கு முன், தினேஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் ஒன்றையும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் வழங்கியிருந்தனர்.

Leave a comment