தரம் 5 புலமைப் பரிசிலில் இரண்டாம் இடத்துக்கு வடக்கு முன்னேற்றம்; மாகாண கல்வி அமைச்சர் பெருமிதம்

356 0
“தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டில் 4 இடத்திலிருந்தே இந்த முன்னேற்றம் கண்டுள்ளது. கல்வி வலய ரீதியில் யாழ்ப்பாண கல்வி வலயம் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏனைய கல்வி வலயங்களும் முன்னேற்றம் கண்டுள்ளன”

இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனும் பங்கேற்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் இம்முறை 20 ஆயிரத்து மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 2 ஆயிரத்து 226 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்தனர். இது தேசிய மட்டத்தில் வடக்கு மாகாணத்தை இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றியது.
தேசிய மட்ட கணித வினாவிடைப் போட்டியில் வடக்கு மாகாண மாணவர்கள் 17 பேர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். இளநிலைப் பிரிவில் 9 தங்கப்பதக்கங்களையும் மூத்த பிரிவில் 8 பதக்கங்களையும் வடக்கு மாகாண மாணவர்கள் பெற்றனர்.
தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வகை 1இல்( தரம்-6) முதலிடம் பிடித்த 115 மாணவர்களில் 33 மாணவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
வகை 2 இல்(தரம் -7,8) முதலிடம் பெற்ற மாணவர்களில் 12 பேர் வடக்கு மாகாண மாணவர்கள்.
வகை 3இல் (தரம் -9,10,11) முதலிடம் பெற்ற 44 பேரில் 7 மாணவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றியீட்டிய வடக்கு மாகாண மாணவர்கள் 4 பேர் சர்வதேச போட்டியில் இந்த வருடம் பங்கேற்கின்றார்கள்.
தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டிகளில் 21 முதலிடங்களையும் 9 இரண்டாம் இடங்களையும் 9 மூன்றாம் இடங்களையும் வடக்கு மாகாண மாணவர்கள் வெற்றியீட்டினர்.
தேசிய மட்ட ஆங்கிலமொழித் தினப் போட்டிகளில் 10 முதலிடங்களையும் 7 இரண்டாம் இடங்களையும் 4 மூன்றாம் இடங்களையும் வடக்கு மாகாண மாணவர்கள் பெற்றனர்.
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 121 முதலிடங்களையும் 82 இரண்டாம் இடங்களையும் 178 மூன்றாம் இடங்களையும் வடக்கு மாகாண மாணவர்கள் பெற்று 153 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தை 6ஆம் இடத்தில் நிலைநிறுத்தினர் – என்றார்.

Leave a comment