பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடத் தயார்

918 0

ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (24) முற்பகல் நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ளவர்களும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த தவறுகளை செய்வார்களானால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏற்கனவே இருந்த ஊழல் ஆட்சியை மாற்றி மக்கள் புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. சரியான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக சரியான திசையில் பயணிக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பிரிவு இலகுவானது என்றும் இணைந்திருப்பது கடினமானதென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசியல் குழந்தைகளாக இல்லாமல் அறிவார்ந்த, முதிர்ச்சியான அரசியல்வாதிகளாக பிளவுகளின்றி நாட்டுக்காக முன்னோக்கிச் செல்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அரசியல் அதிகாரம் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படாது நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியல்வாதிகளாக அனைவரும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

யார் எதைச் சொன்னாலும் தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எப்போதும் தூய்மையான அரசியல் கலாசாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நீண்ட கால அரசியல் பயணத்தில் பல்வேறு அனுபவங்களுக்கு மத்தியில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் செயற்பட்டதாகவும் தான் பயில்வதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேவையாக இருப்பது விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

19ஆம் அரசியல் அமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 47 ஆசனங்கள் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்திலாகும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 142 வாக்குகளும் அதற்காக வழங்கப்பட்டதை நினைவு படுத்திய ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டியது தேர்தல் வெற்றிக்காக மட்டுமன்றி சிறந்த அரசியல் கலாசாரத்திற்காகவுமாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தனது பணிப்புரையின் பேரில் மாதமொன்றிற்கு ஆறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவிடுவதாக குறிப்பிட்டார்.

வடமேல் மாகாண மக்களின் கௌரவத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா, பிரதி அமைச்சர் தாராநாத் பஸ்நாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார, வடமேல் மாகாண அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவ, ஆனந்த சரத் குமார, ஆனந்த ஜயலத், கமல் இந்திக்க, நிலந்த சுபுன் ராஜபக்ஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a comment