தொடரும் சிறி லங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களும் இரண்டு முகச்செயற்பாடுகளும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

8207 0

 

November 21. 2017
Norway

ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு நவம்பர் 06ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் இலங்கையின் மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைபால் ஒரு பக்க அறை நிகழ்வும் நடாத்தப்பட்டது. இனவழிப்பு சிறி லங்கா அரசாலும் இவ்வமர்வில் கலந்துகொள்ள ஒரு அரசமட்டக் குழு அனுப்பிவைக்கப்பட்டிருந்நது இங்கே குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் நடாத்தப்பட்ட பக்கவறை நிகழ்வில் முக்கியமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, ஐநாவின் 30/1 அறிக்கையின் முழு அமூலாக்கம், நிலைமாறுகால நீதிக்கான வினைமுறைத் திறம் மற்றும் முழுமையான OISL பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் பேசப்பட்டது.

15ம் திகதி நவம்பர் அன்று நடைபெற்ற அமர்வில் சிறி லங்கா சார்பாகப் பங்குபற்றிய ஹர்ஷா டீ சில்வா தலைமையிலான அரசமட்ட குழுவினர் வழமைபோல் தமது பொய்யான பிச்சாரங்களை மேற்கொண்டனர். அவர் தனது உரையில் தாம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதிப்பவர்களாகவும் சிறி லங்காவில் மனித உரிமை மிகவும் சரியான முறையில் சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பேணப்படுவதாகவும் வழமை போல் தமது பொய்யான தகவல்களை அள்ளி வீசினார். சர்வதேச ஓப்பந்தங்கள் பலவற்றில் தாம் கையெழுத்து இட்டு இருப்பதாகவும் சிறி லங்காவில் மனித உரிமை மேலோங்கித் திகழ்வதாகவும் படுமோசமான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

2012ல் நடைபெற்ற UPRல் குறிப்பிட்டவற்றையெல்லாம் நிறைவேற்றி விட்டோம் என்று கூறி சிறி லங்காவில் இனங்களுக்கு இடையான ஒற்றுமை மேலோங்கி இருக்கின்றது என்ற மாயையை சர்வதேசத்தின் மத்தியில் முன்வைத்தார். ஆனால் உண்மையில் தமிழர் தாயகத்தில் மக்களின் தொடர்ச்சியான போராட்டம், தமிழர் நிலங்களை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு, தமிழரின் பொருளாதாரத்தை இராணுவத்தினர் கையகப்படுத்துவது போன்ற விடயங்கள் இன்றும் தொடர்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
அத்துடன் அண்மையில் வெளியான சித்திரவதைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது என்பதற்கான சாட்சியங்கள் ஊடாக இன்று சிறி லங்காவில் என்ன நடக்கின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

ஹர்ஷா டீ சில்வா பேசுகையில் தாம் ஜெனீவாவுக்கு பறப்பட்ட வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முதன்பு சித்திரவதைக்கு எதிராக சிறி லங்கா அரசால் சட்டம் ஒன்றை நிறைவேற்றப் பட்டதாகவும் தற்பொழுது அந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் கூறி முழுப் பூசனிக்காயைச் சோற்றில் புதைக்க முற்பட்டார். இப்படியான பொய்ப் பிரச்சாரங்களைத்தான் இதுவரை காலமும் சிறி லங்கா அனைத்து ஐக்கியநாடுகள் சபையின் அமர்விலும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது.

சிறி லங்காவில் உள்ள இரண்டு தேசிய இனங்களில்; தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டு வாழ்வதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் தமிழினவழிப்பு வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

சிறி லங்கா அரசின் கோர முகம் உள்நாட்டிலும் . சர்வதேசத்துக்கு தாம் மனிதநேயம் கொண்டவர்கள் போன்ற முகத்தையும் காட்டும் இந்த அநாகரீகமான செயலை அனைத்துலக ஈழத் தமிழர் அவையாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச அரசுகள் சிறி லங்கா அரசின் தொடர்ச்சியான இந்த இரட்டை முகச் செயற்பாட்டு அணுகுமுறையைக் கண்டிப்பதோடு, மறைமுகமாக இனவாதச் சிறி லங்கா அரசால் நடாத்திக்கொண்டு இருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதோடு தமிழருக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave a comment