மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க வந்த அனைத்து தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்- தீபாவின் கணவர்

399 0

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க வந்த முக்கிய தலைவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபாவின் கணவர் மாதவன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள கல்சா மஹாலில் இயங்கி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் கணவர் க.மாதவன், விசாரணை ஆணைய அலுவலகத்தில் நேற்று ஆஜராகி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதை விசாரணை ஆணைய செயலர் நா.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். அந்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவரைப் பார்க்க இன்றைய குடியரசு துணைத் தலைவர், அப்போதைய தமிழக ஆளுநர், ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், தற்போதைய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் வந்தனர். ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்தது யார் என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த நிலையில், அந்த பாதுகாவலர்களையும் விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் இறப்பு, சசிகலாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த சதியில் அவருக்கும் தொடர்பு இருக்கும் என கருதுகிறேன். அது குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் மருத்துவ புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

போயஸ் தோட்டம், அப்பல்லோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகள் பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற மாதவன், அங்கு பிரமாண பத்திரத்தை வைத்து வணங்கிவிட்டு பின்னர் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

Leave a comment