காந்தியின் படைப்புகள் அனைத்தும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

8082 0

காந்தியின் படைப்புகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

காந்தி கல்வி நிலையம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள 11,419 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் நேற்று நடந்தது. தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர்கே.பாண்டியராஜன் 13 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கினார். அதிக மாணவர்களை தேர்வுக்கு அனுப்பிய 4 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:

காந்தியின் அனைத்து படைப்புகளையும் ஒரே படைப்பாக 100 பாகங்களாக 50 ஆயிரம் பக்கங்களில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அது இதுவரை தமிழில் வெளியாகவில்லை. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக தமிழ் சங்கம் மூலமாக இலக்கிய படைப்புகளை வெளியிட்டு வருகிறோம். காந்தியின் படைப்புகள் இலக்கியம் என்பதால் அவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்ய ஓராண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழடியில் 3 கட்ட ஆய்வு பணிகளை மத்திய அரசு நிறைவு செய்துள்ளது. 4-வது கட்ட பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 கட்ட ஆய்வு பணிகளுக்கான இறுதி அறிக்கை மட்டுமின்றி, நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற 80 ஆய்வுகளும் இணையதளத்தில் வெளியிடப்படும். மத்திய அரசு அமைத்த செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழக முதல்வரின் தலைமையில் இயங்கி வருகிறது. இதற்கு நிறுவனத்துக்கு தலைவர் தேடல் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் தலைமை இயக்குநர் சாதனா ரூட், காந்தி கல்வி நிலையம் அறங்காவலர் தி.விப்ர நாராயணன், செயலாளர் ச.பாண்டியன், கவுரவ இயக்குநர் அ.அண்ணாமலை, சேவாலயா அறங்காவலர் வி.முரளிதரன், தக்கர் பாபா வித்யாலயா சமிதி செயலாளர் பி.மாருதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a comment