காங்கிரஸ் கட்சி வலிமையற்றதாக உள்ளது: திருமாவளவன்

320 0

பாரதிய ஜனதாவுக்கு எதிராக செயல்பட வேண்டிய காங்கிரஸ் கட்சி வலிமையற்றதாக உள்ளது என தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ் (ஏ,ஐ,எம்.ஐ.எம்) கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் அசதுதீன் உவைசி எம்.பி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஓசூர் காமராஜ் காலனியில் நடந்த இக்கூட்டத்திற்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மாநில இணை செயலாளர் இம்தியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அசார், பொருளாளர் அமான், மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சிராஜ் பாஷா வரவேற்று பேசினார். இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் அசதுதீன் உவைசி கலந்து கொண்டு பேசியதாவது:-

‘‘தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அம்பேத்காரை தவறாக சித்தரித்து பத்திரிகையில் கார்ட்டூன் வெளிவந்ததை கண்டித்து, அவர் சபையில் பேசுவதற்கு முயன்றபோது சபாநாயகர் அனுமதி தரவில்லை. அப்போது நான்தான் அவருக்கு ஆதரவாக பேசி, அனுமதி வாங்கி தந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், எங்களின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கும். தொல்.திருமாவளவன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் நுழைய, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினர் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் இஸ்லாமிய சமுதாயமும், தலித் சமுதாயமும் ஒன்று திரண்டு, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் விரோத மோடி அரசை, ஆட்சியிலிருந்து அகற்றவும், வரும் தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் மக்கள் தயாராக வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

‘‘இன்று நாடாளுமன்றத்தில், மோடிக்கு எதிராக குரல் கொடுத்து, உவைசி சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். எதற்கும் அஞ்சாமல் தன் கருத்துகளை அவர் பதிவு செய்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிறுபான்மை சமுதாயத்திற்கு என்றும் உற்ற தோழனாக இருந்து வருகிறது. மேலும் அச்சமுதாயத்தின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெற்று வருகிறது, அ.தி.மு.க. ஆட்சியல்ல. இன்று, பா.ஜனதாவிற்கு எதிராக செயல்பட வேண்டிய, காங்கிரஸ் கட்சி வலிமையற்றதாக உள்ளது, ஆகவே, சிறுபான்மை அமைப்புகளும், தலித் மற்றும் பழங்குடி சமுதாயத்தினரும் மற்றும் இடதுசாரிகளும் ஓரணியில் திரண்டு பணியாற்ற வேண்டிய, ஒரு வரலாற்று தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மோடி, மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மீது வருமான வரித்துறையினரை ஏவி, சோதனை என்ற பெயரில் ஒரு அடக்குமுறையை திணித்து வருவதாக தெரிகிறது, வருமான வரித்துறைக்கு சோதனை செய்ய அதிகாரமுள்ளது, ஆனால் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற விருப்பு, வெறுப்புடன் அந்த துறை செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. வருமான வரித்துறையும், அமலாக்க பிரிவும் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அவை பா.ஜனதா கட்சியின் கட்டுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை, இஸ்லாமிய அமைப்பு என்றே புரிந்து கொள்ளலாம். இதில் எந்தவித முரண்பாடும் இல்லை. இஸ்லாம் சமுதாயத்தினரை, சிறுபான்மையினராக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்கள் மத வெறி சக்திகள் அல்ல. மதத்தின் பெயரால் வெறுப்பு பிரசாரத்தை கையில் எடுப்பதால்தான், நாங்கள் பா.ஜனதாவை விமர்சிக்கிறோம், கண்டிக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இஸ்லாம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட கட்சியாகும். வருங்காலத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் இணைந்து களப்பணியாற்றும். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

Leave a comment