இந்திய கடலோர காவல்படை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தம்: கைது செய்ய வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

525 0

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி கடலுக்குச் சென்ற, பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகைச் சேர்ந்த மீனவர்கள், தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களின் படகை நோக்கிச் சுட்டதில் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகிய மீனவர்கள் காயம் அடைந்து ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 3 பிரிவுகளில் இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இதில் பங்கேற்றதால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கடலோர காவல்படையினரை கைது செய்ய வலியுறுத்தி இன்று (நவ.16) ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கூறியது: ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.

Leave a comment